வெற்றி என்பது சிகரமில்லை, தோல்வி என்பது மரணமில்லை; எழுந்தவன் எல்லாம் நடப்பதில்லை, விழுந்தவன் எல்லாம் கிடப்பதில்லை; விழுந்தவன் எழுந்து தடம் பதிக்க, இமயம் இறங்கி கை கொடுக்கும்; வென்றவன் அங்கே செருக்குற்றால், விடமென்று அவனை ஒதுக்கி வைக்கும்; தோல்விகள் வெற்றியின் படிகள் அல்ல, நம் முயற்சியின் வலிமை சொல்லும் அளவுகோல்; வெற்றியின் அரியணை ஏற, தோல்வியை ஆயுதமாக்கு; ஆயுதங்கள் வென்றிட, முயற்சிகள் திண்மையாக்கு; மாவீரன் என போராடு, அரியணை உனக்கே கொண்டாடு!
இரவில் இதயத்துடிப்புகள் கலைக்கும்; கனவில், காதலியின் கண்ணிமைகள் கலைக்கும்; காதலரின் சந்திப்பில், பேசிப்பேசியே களைக்கும்; கோபத்தின் கர்ஜனையைக்கூட, உள்ளே புகுந்து உடைக்கும்; இது இமைகள் காணாத மொழி, நல் இதயங்கள் உணரும் மொழி, இம்மொழி ஒன்றே, நம்மோடு நாம் பேச வழி!!