Wednesday, December 05, 2012

சிலேடை IV - வெயிலும் அன்பும்

இருள்குகை தாண்டிட வந்தணை உன்னதம்
நீண்டனல் தீண்டிட நிந்தனை பேறுறும்
பெற்றாங்கு சாய்ந்திட கொண்டணைக்க வேங்குமனம்
பற்றாங்கு தோய்ந்திட கார்பரணைக் கண்பதுங்கும்
ஏக்கவழல் மாறுமறு நாள்...


Monday, October 04, 2010

துக்கம்

நிகழ்வு உபாதைகள்
நினைவுகள் ஊடேறி,
நீக்கமற நிறையும்;

அகன்றதொரு தகட்டை
குரல் பாதையில் வைத்து
ஒலிக்காற்றை ஒடுக்கும்;

சிரமேறி,
பின்னங்கண்களை எட்டி மிதித்து,
பிளவுகள் வழி
நீர்நூல் பற்றி புறமிறங்கும்;

வாழ்வதனில், யாவரும் வேண்டாவொரு
இலவச வரம்...

Friday, May 15, 2009

தன்னம்பிக்கை

முயல விழையா மனமும்
முடங்கி நிற்கும் உடலும்
முன்முதல் எதிரிகள்...

தோல்வி ஏற்கும் குணமும்
மீண்டும் முயலும் பலமும்
தலையென்றிருக்கும் தோழைமை...

நல்வன செழித்தும் தீயன அழித்தும்
உலகினை செலுத்தும் பேராண்மையாய்,

எதிரியை விட சூளும்
தோழர்க்கு தோளுமென
இயைந்து நடந்தால்
ஈதல்குணம் மறுக்காது வெற்றிகள்...!

புன்னகை

மழலை செய்தால் தெய்வீகம்,
எதிரி என்றால் தோழைமை,
அன்னையாகிப் போனால் பேரன்பு,
நண்பர் அன்பின் வெளிப்பாடு,
மாற்றார் புரிந்தால் புதுஉறவு,
உலக அமைதியின் பரிமாணம்;

ஆகமொத்தம்,
முகங்கொள் இச்சிறுபிறை -

அழகின் அடைக்கலம்,
மனிதரின் மகிழ்தளம்,
மறைமாலை ஆதவன்,
நிறமில்லா வானவில்...

Friday, April 17, 2009

இன்னா ஒழுக்கம்...

உயிராய் புவியிட்ட அன்னையை வைதலும்
நம்பினோர் நெஞ்சினில் நஞ்செடுத்தி ரைத்தலும்
முன்னுரை நல்லுரையும் பின்னுரை தீதுரையும்
வாழ்வினில் இன்கொல் நெறி...

Wednesday, February 04, 2009

உறக்கம்

ஈரிமையி டையடை காரிருளோ தீர்ந்த
தொருநா ளெனநா மிடும்முற்றோ சொப்பனத்தின்
சாரதியோ மீண்டுங் கருவறை சேர
தவணைமு றைமுயற்சி யோ

Wednesday, December 17, 2008

ஈடில்லாதவை...

உடனோர் துணையும் மகிழ்வோ டுரையும்
இடர்க்கோர் திரையும் மனங்கொள் மடலும்
தோழைமையொ டன்பும் மதிப்பி லிசையா
கவிதைநிகர் பேர்பொன் குடகு...

----------------------------------------------------------------------

விளக்கம்:

கவிதை போன்று ரம்மியமான நீண்டு உயர்ந்த குடகின் மலைகளை பொன்னால் செய்தால் எப்படி மதிப்பிட இயலாதோ,

அதுபோல்
மனிதரின் வாழ்க்கையில்,

வாழ்க்கை முழுவதும் உடன் வர ஒரு துணையும்,
அவர்களோடு ஏற்படும் இனிமையான உரையாடலும்,
துன்பத்தை காட்டாது மறைக்க ஒரு திரையும்,
ஒருவர் மனம் திறந்து எழுதிய கடிதமும்,
நல்ல நட்பும், அன்பும்

மதிப்பிட முடியாதது ஆகும்

Friday, November 21, 2008

முதல் புள்ளியில்

இதயங்கள் ஒன்றாகும்,
இமைகள் இரண்டாகும்;
கனவுகள் உண்டாகும்,
கவிதைகள் என்றாகும்;
பார்த்து சலித்த தோற்றத்திலே,
பார்வையின் விதம் வேறாகும்;
பாதங்கள் நடக்கும் பலதூரம்,
வலியின்றி கடக்கும் மறு ஓரம்;
எண்ணங்கள் எல்லாம் இடம் மாறும்,
கவனங்கள் மட்டும் தடுமாறும்;
வெறுத்தவை கூட அழகாகும்,
இனித்தவை இன்னும் அழகாகும்;

இத்தனையும் நிரம்பி வழியும்
உலகமயமாக்கலின் முதற்புள்ளியான
என் ஒருதலைக் காதலில்...

Friday, October 24, 2008

சினம் தவிர்

வன்சொல் சினத்தா லுரைத்துபின் அன்பினால்
இன்சொல் பலசொலினும் காயங்கள் நன்றாகா
கூரை மழைத்துளி மண்வீழ்ந்து குழியாகி
பின்நிரைத்தும் திட்டாதல் போல்

Friday, October 17, 2008

ஆத்திகத்தின் உவமேயம்

ஜனனமர ணங்காலஞ் செய்த மரபு
மனனநி கழ்விதைத்த லைவிதி யானதும்
முற்பிறவிப் பாவமான தும்ஆகக் கோர்தலும்
ஆத்திகத்தின் கற்பனைக் கூற்று!