
எங்கள் கனவுச்சிறகுகளுக்கு,
கணிணித்திரைகளை வானமென்று கருதும் பாவிகள் நாங்கள்!
மாதம் ஒரு முறை
கையெழுத்து பிரதிகளாய் வரும் கடிதங்களையும்,
அதில் நாட்கள் பலவாகியும்
ருசியுடன் ஒட்டிக்கொண்டு வரும்
அம்மா சமையலின் ஒற்றைப் பருக்கையையும்,
இரண்டு நிமிடங்களில் வந்து சேரும் ஒரே காரணத்திற்காக
களவாடிக்கொண்டன எங்கள் மின்னஞ்சல் பரிவர்த்தணைகள்;
தட்டச்சில் விரல் நுனிகளின் வேகமான ஆங்கிலம்,
நரம்புகளின் ஊடேறி தொண்டைக்குழி வரை செழித்து
துவம்சமாக்குகிறது தாய்மொழியின் ஒலிபரப்புகளை;
பிறவாத சிசுவுக்கு பெயர் தேடவும்,
பிறந்த குழந்தைக்காய் செவிலிகள் தேடவும்
துணை நின்ற உலகத்தின் அஞ்சறைப்பெட்டி,
மழலை பிசைந்த அமிர்தச்சோற்றை தாயிடமும்,
தோளில் உறங்கும் வாரிசின் பாரத்தை தகப்பனிடமும்
கொண்டு சேர்க்க மறுக்கின்றது...
பக்கத்து வீட்டுக்காரரின் மகள் திருமணத்திற்கு
மூன்று நாள் முன்கூட்டியே சென்று
ஒத்தாசையாய் வேலைகள் செய்தவரின் சந்ததிகள் நாங்கள்;
இன்று, சொந்தத் தங்கையின் திருமணத்தைக்கூட
குறுவட்டுகளில் மட்டுமே காண நேரும் அவலத்திற்கு,
கடமை என்று காரணம் கற்பிக்கிறது எங்கள் தொழில்!!!