Friday, October 12, 2007

அழுகை




விழிகள் வழிந்திட,
காணும் வழிகளை மடை மறைத்திட,
இமைகள் திறந்தும் குவிந்து கிடக்கும் இருள்;
சிரித்து சிரித்து கன்னங்கள் கறுத்ததால்,
விழிகள் துரத்தும் வாசல் நீர்;
விரல்கள் கோலமிட்டால்,
விழிநீர் விடைபெறும்;
விஞ்சிக்கிடக்கும் சோகம்?

Thursday, October 11, 2007

வென்று விடு!




வெற்றி என்பது சிகரமில்லை,
தோல்வி என்பது மரணமில்லை;
எழுந்தவன் எல்லாம் நடப்பதில்லை,
விழுந்தவன் எல்லாம் கிடப்பதில்லை;
விழுந்தவன் எழுந்து தடம் பதிக்க,
இமயம் இறங்கி கை கொடுக்கும்;
வென்றவன் அங்கே செருக்குற்றால்,
விடமென்று அவனை ஒதுக்கி வைக்கும்;
தோல்விகள் வெற்றியின் படிகள் அல்ல,
நம் முயற்சியின் வலிமை சொல்லும் அளவுகோல்;
வெற்றியின் அரியணை ஏற,
தோல்வியை ஆயுதமாக்கு;
ஆயுதங்கள் வென்றிட,
முயற்சிகள் திண்மையாக்கு;
மாவீரன் என போராடு,
அரியணை உனக்கே கொண்டாடு!

Tuesday, October 09, 2007

மௌனம்



இரவில் இதயத்துடிப்புகள் கலைக்கும்;
கனவில்,
காதலியின் கண்ணிமைகள் கலைக்கும்;
காதலரின் சந்திப்பில்,
பேசிப்பேசியே களைக்கும்;
கோபத்தின் கர்ஜனையைக்கூட,
உள்ளே புகுந்து உடைக்கும்;
இது இமைகள் காணாத மொழி,
நல் இதயங்கள் உணரும் மொழி,
இம்மொழி ஒன்றே,
நம்மோடு நாம் பேச வழி!!

Thursday, September 27, 2007

கவிதைக்காரணம்!



என் பேனாவின் முள்ளுக்குத்தான்
எத்தனை தைரியம்?
என் இதழ்கள் சொல்லத்தயங்கும்
வார்த்தைகளை எல்லாம்,
சட்டென உதிர்த்து விடுகிறது
கவிதைகளாய்!?!

Thursday, August 30, 2007

அதிசயம் !!!




அதிசயம் :
நீரின்றி வாழும் மீன்கள் !
உபயம் :
என்னவள் மூக்குக் கண்ணாடி !!

ஹைக்கூ - மழை !!




மேக மீனவனின்
திரவத்தூண்டில்,
மழை !!

இதுதான் காதலா ?!?




தனிமையில் இருக்கும்போது,
வாக்கியங்களோடு வாதாடுகிறேன்…!
உன்னுடன் இருக்கும்போது,
வாக்கியங்களுக்காக வாதாடுகிறேன்…!!

கனவு

கற்பனையின்
பிரசவங்களுக்காக
ஒரு தாய்,
உறக்கம் !

Tuesday, August 28, 2007

கல்லூரி வாழ்க்கை

வண்ணத்துப்பூச்சியின் உடை வாங்கி,

வானகத்து மின்னலாய் தலைகோதி,

விரல்களுள் அடங்கும் புத்தகம் சுமந்து,

கண்களில் ஏக்கம் தெறிக்க,

பூமியின் சொர்க்கத்தில் பாதம் நட்டோம் ,
பிரிவென்பதோர் புயல் வந்து நம்மைசாய்க்கப்போகும் செய்தி அறியாமல் !

மாமன் மச்சான் என்றுமரபுகள் இன்றி உறவுகள் வளர்த்தோம்...

கவலைகளுக்கான மருந்தையும்,இன்பமென்னும் விருந்தையும்,
ஒன்றாய் கொண்டு வலம் வந்தோம் ;

வகுப்பறையின் சுவர்களுக்கெல்லாம்புத்தகம் காணாத பாடங்கள் கற்பித்தோம் !

ஆசிரியர்களுக்கு தூக்கத்தின் செய்முறை காண்பித்தோம் .....

கன்னிகளை கவர்வதற்காககண்களில் காதலுடன் வலம் வந்தோம் !!

ஒட்டிப்பிறந்த பாண்டவர்போல விட்டுப்பிரியாமல்,
நண்பர்களுடனே சுற்றித்திரிந்தோம் ....

அவ்வப்போது வந்த ஊடல் எல்லாம்,
சின்ன விருந்துகளால் மறந்து போனோம்;

உலகமே நம்மை பார்க்க வேண்டுமென்று,
முடியாத இளமைச்சேட்டைகள் முயற்சித்தோம் ...

மரணத்திற்கான தேதி குறிக்கப்பட்டமானுடராய் மாறினோம்,
நாம் பிரிவதற்கான நாளை அறிவித்தபோது !

அந்த நாளில் எதிர் கொண்ட நிமிடங்ளில்,

தழுவல்கள் எத்தனை ?
உறுதிகள் எத்தனை ?
சத்தியங்கள் எத்தனை ?
மன்னிப்புகள் எத்தனை ?
காதல்கள் எத்தனை ?

காலத்தின் நீரில் எல்லாமே கரைந்து விட்டாலும்,

மனமென்னும் பாறையில் அதன் சின்னஞ்சிறுபாசிகளேனும் படிந்திருப்பதை,நம்மால் இன்னும் உணர முடிகிறதே ! ? !


கல்லூரி என்றுமே கனவுகளின் கூடாரம்தான் !!!!!

குரல் கேட்காதா ???




எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,
சர்க்கரை அதிகமாய் என்றுகேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,
விரும்பிய இசைபாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,
நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு
…..


இங்ஙனம்,

பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,
மென்பொருள் வல்லுனன்.