Wednesday, December 17, 2008

ஈடில்லாதவை...

உடனோர் துணையும் மகிழ்வோ டுரையும்
இடர்க்கோர் திரையும் மனங்கொள் மடலும்
தோழைமையொ டன்பும் மதிப்பி லிசையா
கவிதைநிகர் பேர்பொன் குடகு...

----------------------------------------------------------------------

விளக்கம்:

கவிதை போன்று ரம்மியமான நீண்டு உயர்ந்த குடகின் மலைகளை பொன்னால் செய்தால் எப்படி மதிப்பிட இயலாதோ,

அதுபோல்
மனிதரின் வாழ்க்கையில்,

வாழ்க்கை முழுவதும் உடன் வர ஒரு துணையும்,
அவர்களோடு ஏற்படும் இனிமையான உரையாடலும்,
துன்பத்தை காட்டாது மறைக்க ஒரு திரையும்,
ஒருவர் மனம் திறந்து எழுதிய கடிதமும்,
நல்ல நட்பும், அன்பும்

மதிப்பிட முடியாதது ஆகும்

Friday, November 21, 2008

முதல் புள்ளியில்

இதயங்கள் ஒன்றாகும்,
இமைகள் இரண்டாகும்;
கனவுகள் உண்டாகும்,
கவிதைகள் என்றாகும்;
பார்த்து சலித்த தோற்றத்திலே,
பார்வையின் விதம் வேறாகும்;
பாதங்கள் நடக்கும் பலதூரம்,
வலியின்றி கடக்கும் மறு ஓரம்;
எண்ணங்கள் எல்லாம் இடம் மாறும்,
கவனங்கள் மட்டும் தடுமாறும்;
வெறுத்தவை கூட அழகாகும்,
இனித்தவை இன்னும் அழகாகும்;

இத்தனையும் நிரம்பி வழியும்
உலகமயமாக்கலின் முதற்புள்ளியான
என் ஒருதலைக் காதலில்...

Friday, October 24, 2008

சினம் தவிர்

வன்சொல் சினத்தா லுரைத்துபின் அன்பினால்
இன்சொல் பலசொலினும் காயங்கள் நன்றாகா
கூரை மழைத்துளி மண்வீழ்ந்து குழியாகி
பின்நிரைத்தும் திட்டாதல் போல்

Friday, October 17, 2008

ஆத்திகத்தின் உவமேயம்

ஜனனமர ணங்காலஞ் செய்த மரபு
மனனநி கழ்விதைத்த லைவிதி யானதும்
முற்பிறவிப் பாவமான தும்ஆகக் கோர்தலும்
ஆத்திகத்தின் கற்பனைக் கூற்று!

Thursday, October 16, 2008

ஈழமுழக்கம்

விடுதலை முழக்கமிட காணிநிலம் வேண்டுமென,
எங்களின் புனிதப் பயணம் இது!

துப்பாகியின் தோட்டாக்கள் - எங்கள்
தூதுவப் போராளிகள்;
குண்டு உமிழும் பீரங்கிகள் - எங்கள்
தெருக்களின் ஏர் கலப்பைகள்;

நெற்பயிர்களுக்கு பதில் உயிர்ப்பயிர்களை
விதைத்து வருகிறோம்...
சுதந்திரப்பூ என நிச்சயம் விளையும்
ஒரு நாள் அவை!

வீதிகளில் மண் தோண்டி விளையாடும்
மழலையரின் நகக்கண்களில் சதைத்துணுக்கும்,

தீண்டத்தகாதவராய் சித்தரிக்கப்படும்
தியாகப்போராளிகளின் திரைமறை வாழ்வும்,

அடிமை இருள் படிந்த எங்கள் குலமும்,
நிச்சயம் மாறும் ஒரு விடியலில்...

அன்றைய ஆதவன் விடுதலை ஒளியை
பரவ விடுவான் எங்கள் வழிகளில்!!!

Monday, October 13, 2008

சிலேடை III - சிசுவும், மழையும்

புவிவிழக் காலக் கெடுவ தனொடு
அளவளாவிக் கொள்ளும் மகிழ்வும் இணைந்து
வினவா நொடிதருஞ்சி ணுங்கல் இடரும்
பெருஞ்சிறந்த வாழ்வின் வரம்...

Saturday, September 27, 2008

சிலேடை II - மானும் கண்ணும்

புள்ளிகளாய் உற்றிருக்கும் யாக்கை யினில்பின்
நொடிக்கோ ரிடமாய்ப் பறந்திடும்வே கந்தனில்
கேடயமாய் மேலில் வளர்மென் சிறுநீளக்
காம்புகள் காக்கும் இடர்.

Wednesday, September 24, 2008

சிலேடை I - "உழவனும் ஒவியனும்"

காளை விரலிடுக்கில் ஏர்த்தூரி கைபூட்டி
கீழ்நுனிக லப்பைச் சிறகாகி தாளடியில்
செம்மை வருடிடுங் கோடுகள் யாவும்
பசிதீர் படைப்புகள் தான்!

பி.கு:
எனது இந்த கவிதை அதிகாலை எனும் தமிழ் வலைத்தளத்தில்
மார்ச்-11-2009 அன்று பிரசுரமாகி உள்ளது...

முகவரி ->
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11224&Itemid=147

Sunday, September 21, 2008

துயரங்கள் தூரமாகட்டும்

துன்பம் கண்டு துவள்வெதெல்லாம்
வீணர்கள் இயலாமை!

இருள் வருவது எல்லாம் இமைகள் மூடித்தான்;
உலகம் என்றும் திறந்தே இருக்கிறது...

உணர்ந்து நீயும் அதனில் இன்புற,

கண்கள் திறந்திடு,
கவலை துறந்திடு,
துன்பம் மறந்திடு,
வழிகள் தேர்ந்தெடு,
முயற்சியின் அம்பு தொடு,
வெற்றியின் இலக்கு தொடு,

துயரத்தின் இருளில்
மகிழ்ச்சி வெள்ளம் பரவ விடு;

வாழ்வின் காலம் முற்றும் மட்டும்,
துயரம் என்பது மட்டும் மட்டும்,
தொடாத தூரம் எட்டும் எட்டும்...

மரணம்

நேற்றைய நாட்குறிப்பில்
எழுதாத திட்டம்!
இனி நம் பக்கங்களில்
ஏறாத நிகழ்வு!!

Wednesday, September 17, 2008

உன்னுடன் ஒரு மாலையில்...

வீதியில் நடந்த நமக்கு முன்னால்,
மழலையோடு வந்த தாயைப்பார்த்து
உன்னோடு நான் வருவதாக
உவமைப்படுத்தினாய்...

மிகை என்று மனதில் சிரித்துக்கொண்டேன்;

வழிச்சிறுவர்களோடு கலந்து,
விதிமுறை தெரியாது விளையாடி,
தோல்வி மறைக்க என்னை நடுவராக்கி,
உனக்கே வெற்றி என வாதிட
கெ(கொ)ஞ்சினாயே...

அப்போது தான் உணர்ந்தேன்,
உவமை உண்மை என்று !!!

Tuesday, July 29, 2008

கவிதை




என் எழுதுகோலின் மைத்துளிகளும்,
அதைத் தாங்கிய காகிதமும்,
தழுவியதன் அடையாளங்களில்
அடைந்திருக்கும் அர்த்தங்கள்!

Wednesday, July 16, 2008

அம்மா



அகராதியும் அர்த்தங்களும் இல்லாத,
அழகான மழலை மொழிக்கான
அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளினி...

Wednesday, February 20, 2008

உணராத உண்மைகள் . . .




எங்கள் கனவுச்சிறகுகளுக்கு,
கணிணித்திரைகளை வானமென்று கருதும் பாவிகள் நாங்கள்!

மாதம் ஒரு முறை
கையெழுத்து பிரதிகளாய் வரும் கடிதங்களையும்,
அதில் நாட்கள் பலவாகியும்
ருசியுடன் ஒட்டிக்கொண்டு வரும்
அம்மா சமையலின் ஒற்றைப் பருக்கையையும்,
இரண்டு நிமிடங்களில் வந்து சேரும் ஒரே காரணத்திற்காக
களவாடிக்கொண்டன எங்கள் மின்னஞ்சல் பரிவர்த்தணைகள்;

தட்டச்சில் விரல் நுனிகளின் வேகமான ஆங்கிலம்,
நரம்புகளின் ஊடேறி தொண்டைக்குழி வரை செழித்து
துவம்சமாக்குகிறது தாய்மொழியின் ஒலிபரப்புகளை;

பிறவாத சிசுவுக்கு பெயர் தேடவும்,
பிறந்த குழந்தைக்காய் செவிலிகள் தேடவும்
துணை நின்ற உலகத்தின் அஞ்சறைப்பெட்டி,
மழலை பிசைந்த அமிர்தச்சோற்றை தாயிடமும்,
தோளில் உறங்கும் வாரிசின் பாரத்தை தகப்பனிடமும்
கொண்டு சேர்க்க மறுக்கின்றது...

பக்கத்து வீட்டுக்காரரின் மகள் திருமணத்திற்கு
மூன்று நாள் முன்கூட்டியே சென்று
ஒத்தாசையாய் வேலைகள் செய்தவரின் சந்ததிகள் நாங்கள்;
இன்று, சொந்தத் தங்கையின் திருமணத்தைக்கூட
குறுவட்டுகளில் மட்டுமே காண நேரும் அவலத்திற்கு,
கடமை என்று காரணம் கற்பிக்கிறது எங்கள் தொழில்!!!

Friday, January 11, 2008

நேற்று - இன்று - நாளை

நேற்று - உன் அறிவு முதிர்ச்சிக்கான எடுத்துக்காட்டு;

இன்று - முதிர்ச்சியை முன்னேற்றுவதற்கான முயற்சி;

நாளை - மீண்டும் ஒரு முயற்சிக்கான கையிருப்பு !!!